‘கூலி’க்காக முனைந்த ஆமிர் கான் – வர்த்தக வட்டாரத்தின் அதிர்ச்சி

‘கூலி’ திரைப்படத்தின் திரையரங்கு ஒப்பந்த விவகாரம் குறித்து, பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்கு நிர்வாகிகளுடன் நேரடியாக பேசியுள்ளார் ஆமிர் கான்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில், சிறப்பு தோற்றத்தில் ஆமிர் கான் நடித்துள்ளார். இந்தி தவிர்ந்த பிற மொழிகளில் ‘கூலி’ திரைப்படத்திற்கு திரையரங்கு ஒப்பந்தங்களில் அனைத்துத் தரப்பினரிடமும் முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால், இந்தியில் ‘வார் 2’ வெளியாக இருப்பதால், அந்தப் படத்திற்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், ‘கூலி’ படத்திற்காக தாமாகவே முன் வந்து, பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகிகளுடன் ஆமிர் கான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் விளைவாக, இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் திரையரங்குகள் பகிரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆமிர் கானின் இந்த நடவடிக்கை, பல வர்த்தக வல்லுநர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில், ‘கூலி’ படத்தில் நடித்ததற்காக ஆமிர் கான் எந்தக் கூலியும் பெறவில்லை. இருந்தபோதிலும், அந்தப் படத்துக்கு திரையரங்கு ஒதுக்கீடு கிடைக்க அவர் தானாகவே முன்னிலை வகித்திருப்பது, இந்தி திரைப்படத் துறையினரிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம், இந்தியிலும் ‘கூலி’க்கு கணிசமான அளவில் திரையரங்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆகஸ்ட் 11 அன்று மும்பையில் ‘கூலி’ படத்தின் பிரச்சார நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Facebook Comments Box