ட்ரம்ப்பின் 50% வரி முடிவு, இந்தியா மீது பொருளாதார தாக்கம்!

இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இதனால் இந்தியாவின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலக பொருளாதார நிபுணர்கள் இதுகுறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதாக குற்றம் சாட்டி, தனது எதிர்ப்பையும் மீறி, மேலும் 25 சதவீதம் வரி விதிப்பதாக அவர் ஆகஸ்ட் 6 அன்று அறிவித்தார். இந்த கூடுதல் வரி ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி இவ்வார வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்தியா – அமெரிக்கா வர்த்தகம்:

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 20% மட்டுமே அமெரிக்காவுக்கு செல்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% ஆகும். ஆண்டுக்கு ரூ. 8,650 கோடி மதிப்புள்ள பொருட்களை இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. புதிய வரி நடவடிக்கையால் ரத்தினக் கற்கள், நகைகள், ஆடைகள், ஜவுளி, ரசாயனங்கள் போன்ற பொருட்களின் ஏற்றுமதி குறையக்கூடும்.

2023-24 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்கா – 18%, ஐக்கிய அரபு அமீரகம் – 8%, நெதர்லாந்து – 5%, சீனா – 4%, சிங்கப்பூர், பிரிட்டன், சவுதி அரேபியா, வங்கதேசம் – தலா 3%, ஜெர்மனி, இத்தாலி – தலா 2%, மற்ற நாடுகள் – 49% ஆக இருந்தது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை தெரிவித்துள்ளது.

பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், அமெரிக்கா விதிக்கும் இந்த இறக்குமதி வரி நடவடிக்கை இந்தியாவின் வளர்ச்சியில் சிறு பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு. உலக வங்கி (2023 ஜிடிபி) தரவுகளின்படி, இந்தியாவின் பொருளாதாரம் ஏற்றுமதி சார்பில் வியட்நாம் (87%), தாய்லாந்து (65%), துருக்கி (32%), பிலிப்பைன்ஸ் (27%) ஆகியவற்றை விட குறைவான 22% மட்டுமே உள்ளது; இந்தோனேசியாவும் அதே 22%, வங்கதேசம் 13% ஆக உள்ளது.

அமெரிக்கா சார்பு:

சில துறைகளில் இந்தியாவின் பொருளாதாரம் அமெரிக்காவை சார்ந்துள்ளது. பொருளாதார நிபுணர் தன்வி குப்தா ஜெயின் கூறுகையில், ரத்தினக் கற்கள், நகைகள், ஆடைகள், ஜவுளி, ரசாயனங்கள் போன்ற துறைகள் பாதிக்கப்படும். இந்த சூழலில் அரசின் ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

பங்குச்சந்தை விளைவுகள்:

அமெரிக்க வரி காரணமாக இந்திய பங்குச்சந்தை முதலீடுகள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலீட்டு ஆலோசகர் ரஜத் அகர்வால் கூறுகையில், ஐடி சேவை சார்ந்த முதலீடுகள் பாதிக்கப்படாது, ஆனால் ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றம் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு என்றார்.

வரி விலக்கு சாத்தியம்:

அமெரிக்காவுக்கு அதிக அளவில் இந்தியா மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது; அவை வரிவிலக்கு பெற வாய்ப்பு உள்ளது. ஸ்டீல், அலுமினியம் போன்ற உலோகங்களுக்கு பிரத்யேக உத்தரவு மூலம் வரி விதிக்கப்பட்டதால், அந்தத் துறையில் பெரிய பாதிப்பு இருக்காது. அதேபோல் செமிகண்டக்டர், மின்னணு பொருட்கள் வரிவிலக்கு பெற்றுள்ளதால், இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனம் போன்றவற்றின் ஏற்றுமதிக்கும் பாதிப்பு குறைவு.

இந்தியா–அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் உருவானால், இந்த வரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என வணிகர்கள் நம்புகின்றனர்.

Facebook Comments Box