தமிழகத்தில் ரூ. 4,486 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை புறப்பட்ட நிலையில் 10:35 மணிக்கு சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயில் சேவை, கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க உள்ளார். இந்த நிகழ்வில் தமிழக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர், அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்ற தகவலும் வெளியாகின. மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது அரசு நிகழ்ச்சி என்பதால் அரசியல் பேசுவதற்கான வாய்ப்பு இல்லை தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியிருந்தார். 
இந்நிலையில் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க பாமக நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். பாமக நிர்வாகிகள் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் சென்னைக்கு வந்துள்ளனர். அழைப்பு வந்துள்ளதால் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்துள்ளதாக பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி,  தமாகா சார்பில் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பிரதமர் மோடி நிகழச்சியில் பங்கேற்க உள்ளனர். இதனால் பிரதமர் நிகழ்ச்சியிலேயே கூட்டணி இறுதிசெய்யப்பட இருப்பவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Facebook Comments Box