அமெரிக்காவில் கம்பராமாயண கர்நாடக இசைக் கச்சேரி!

கர்நாடக இசை மேடைகளுக்கு கம்பராமாயணப் பாடல்களை நேரடியாக கொண்டு சேர்க்கும் இசை நிகழ்ச்சி, அமெரிக்காவின் டாலஸ், டெக்சாஸ் நகரில் நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் சில முயற்சிகள் நடைபெற்றிருந்தாலும், அவை விருத்தம் வடிவிலேயே நடந்தவை. பாடகர்கள் சேஷகோபாலன், சிக்கில் குருச்சரண் உள்ளிட்டோர் இதற்கு முன் சில பாடல்களைப் பாடியிருந்தாலும், பாடகர், பியானோ, மிருதங்கம், வயலின், கஞ்சிரா ஆகியவற்றுடன் இணைந்த முழுமையான கர்நாடக இசைக் கச்சேரி வடிவில் கம்பராமாயணப் பாடல்கள் இதுவரை நிகழ்த்தப்படவில்லை. அதுபோன்ற ஒரு நிகழ்ச்சி, வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி டாலஸ் நகரின் புகழ்பெற்ற நாக் கலையரங்கில் நடைபெற உள்ளது.

அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து தமிழ்ச் சங்கப் பாடல்களுக்கு உலக அரங்கில் இசை வடிவம் அளித்த இசையமைப்பாளர் ராலே ராஜன் (ராஜன் சோமசுந்தரம்), தேர்ந்தெடுத்த 16 கம்பராமாயணப் பாடல்களுக்கு ராகம்–தாளம் சேர்ந்த முறையான கர்நாடக இசை வடிவம் அமைத்துள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் முன்பாக, அதன் கவிதை நயத்தை விளக்கும் சுருக்கமான முன்னுரையும் வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் அமெரிக்காவில் பல கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடியதுடன், தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பாடிய ப்ரியா கிருஷ் பாடவுள்ளார். அவருடன், ஏ.ஆர். ரஹ்மான், தேவி ஶ்ரீ பிரசாத், எஸ்.எஸ். தமண் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களுக்கு பியானோ வாசித்துள்ள சாய் சங்கர் கணேஷ் பியானோவில் இணைகிறார். மேலும், அமெரிக்காவில் வாழும் புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர்கள் உமாமகேஷ் (வயலின்) மற்றும் ராஜு பாலன் (மிருதங்கம்) இசை வாத்தியங்களில் கலந்து கொள்கிறார்கள்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் அமெரிக்கக் கிளை ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த கச்சேரி தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, இசை ஆர்வலர்கள் contact@visnupuramusa.org என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

Facebook Comments Box