காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் குருகிராமில் 3.5 ஏக்கர் நிலம் லஞ்சமாக பெற்றார் ராபர்ட் வதேரா – அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை
2008ஆம் ஆண்டு ஹரியானாவில் காங்கிரஸ் அரசு இருந்தபோது, முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா பதவி வகித்தார். அப்போது, ஆங்கரேஸ்வர் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (OBPL) என்ற நிறுவனம், குருகிராமில் தமக்கு சொந்தமான நிலத்தில் வீடுகள் கட்ட அனுமதி பெற முயன்றது.
அந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா, தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, OBPL நிறுவனத்துக்கு நகர் ஊரமைப்பு இயக்ககத்திலிருந்து (DTCP) உரிமம் பெறச் செய்து தந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கான பதிலாக, குருகிராமில் உள்ள 3.5 ஏக்கர் நிலத்தை OBPL நிறுவனம், ராபர்ட் வதேராவுக்கு வழங்கியது. இதை தாம் ரூ.7.5 கோடிக்கு வாங்கியதாக வதேரா கூறினாலும், அது தவறான தகவல் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஏனெனில், அப்போது வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் (SLHPL) நிறுவன வங்கி கணக்கில் அந்த அளவிற்கு நிதி இல்லை. மேலும், குறிப்பிடப்பட்ட காசோலை எண் வங்கியில் பணமாக்கப்படாததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை SLHPL நிறுவனம் பின்னர் DLF ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு விற்றது.
இதையடுத்து, நிதிமோசடி தடுப்பு சட்ட நீதிமன்றம் ராபர்ட் வதேராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேசமயம், ஃபரிதாபாத்தில் அவருக்கு சொந்தமான 39.7 ஏக்கர் நிலம் (மதிப்பு ரூ.37 கோடி) கடந்த மாதம் 16ஆம் தேதி அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
பிரியங்கா காந்திக்கு புதிய சிக்கல்
வயநாடு தொகுதியில் போட்டியிட்டபோது, தனது வேட்புமனுவில் கணவர் ராபர்ட் வதேராவின் சொத்து விவரங்களை பிரியங்கா காந்தி வெளிப்படுத்தவில்லை. இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வேட்பு மனுவில் சொத்துகளை மறைப்பது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இது தகுதி நீக்கம் அல்லது சிறைத் தண்டனையையும் ஏற்படுத்தக்கூடும்.