உலக நன்மைக்காக பழநியில் ஜப்பான் பக்தர்களின் பால்குட யாத்திரை
பழநி முருகன் கோயிலில், உலக நன்மை வேண்டி ஜப்பான் பக்தர்கள் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி மலையடிவாரத்தில், போகர் சித்தரின் சீடரான புலிப்பாணி சித்தரின் ஜீவசமாதி மற்றும் ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கிருந்து, ஆகஸ்ட் 9ஆம் தேதி (சனிக்கிழமை) காலை, ஶ்ரீலஶ்ரீ சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில், தொழிலதிபர் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் முன்னிலையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 100 பக்தர்கள், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து, மேளம்–தாளம் ஒலியுடன், திருஆவினன்குடி குழந்தை வேலப்பர் கோயிலுக்கு பால்குடம் எடுத்துச் சென்றனர்.
அங்கு, முருகனுக்கு பாலஅபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர், பழநி மலைக்கோயிலுக்கு படிப்பாதை வழியாக சென்று, தண்டாயுதபாணி சுவாமி மற்றும் போகர் ஜீவசமாதியில் வழிபட்டனர். அதன் பின், மலையடிவாரத்திலுள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நிறைவு செய்தனர்.