தேர்தல் ஆணையத்தை நோக்கி இண்டியா கூட்டணி எம்.பிக்களின் பிரம்மாண்ட பேரணி இன்று
வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் என்பதையும், பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், இண்டியா கூட்டணியின் எம்.பிக்கள் இன்று டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்துகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இப்பேரணியில் 25 கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் பங்கேற்கின்றனர். பேரணி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.
இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவசேனா (யுபிடி) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆனால், இந்த பேரணிக்கு டெல்லி போலீஸ் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், இண்டியா கூட்டணி சார்பில் இந்தப் பேரணிக்காக உரிய அனுமதி கோரப்படவில்லை என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும், இண்டியா கூட்டணி பேரணிக்கான தயாரிப்புகளை மேற்கொண்டு வருவதுடன், ஆங்கிலம், இந்தி, தமிழ், வங்காளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில், பீஹாரில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் திருத்தத்துக்கும், வாக்கு திருட்டுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்திச் செல்லவுள்ளது.
முன்னதாக, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பல போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதையும், பலர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதையும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.
நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் அவர், “வாக்கு திருட்டு என்பது ‘ஒருவர் – ஒரு வாக்கு’ என்ற ஜனநாயக அடிப்படைக்கு நேரான தாக்குதலாகும். தெளிவான வாக்காளர் பட்டியல் தான் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்யும். தேர்தல் ஆணையம் வெளிப்படையாக செயல்பட்டு, மின்னணு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களும் கட்சிகளும் அதை ஆய்வு செய்ய முடியும். இதை வலியுறுத்தி பிரச்சாரம் தொடங்குகிறோம். அதற்காக http://votechori.in/ecdemand என்ற இணையதளத்தையும், 96500 03420 என்ற செல்போன் எண்ணையும் தொடங்கி வைக்கிறோம். மக்கள் இணையதளத்தில் கருத்து தெரிவிக்கலாம்; மிஸ்டு கால் மூலம் பிரச்சாரத்தில் இணைக்கலாம்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று இந்த பிரம்மாண்ட பேரணி நடைபெற உள்ளது.