“கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டும் வாழ்க்கை பெரிது” – விரைவான ஓய்வைப் பற்றி பிரியங்க் பஞ்சல்
குஜராத் அணியின் முன்னாள் கேப்டனும் திறமையான பேட்டருமான பிரியங்க் பஞ்சலின் முதல் தர கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் 314 நாட் அவுட். 2008-ல் 18 வயதில் அறிமுகமான அவர், 2024-ல் 35 வயதில் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். டி20, ஐபிஎல் போன்ற பணமழை காலத்திலும் ஏன் இத்தனை சீக்கிரம் ஓய்வு? என்ற கேள்விக்கு, “வாழ்க்கை கிரிக்கெட்டைவிட பெரியது” என தத்துவார்த்தமாக பதிலளித்துள்ளார்.
இந்தியா ஏ அணியை வழிநடத்தியதோடு, இந்திய தேசிய அணியிலும் இடம்பிடித்திருந்த பிரியங்க் பஞ்சல், கடந்த மே மாதம் தனது ஓய்வை அறிவித்தார். எக்ஸ் தளத்தில் ‘எதை வேண்டுமானாலும் கேளுங்கள்’ என்ற அமர்வின் போது, ஒரு ரசிகர் “ஏன் இவ்வளவு சீக்கிரம் ஓய்வு?” என்று கேட்டார். அதற்கு, “ஒவ்வொரு வீரருக்கும் இரண்டு கரியர்கள் உள்ளன – விளையாடும் காலமும், விளையாடாத காலமும். இந்தியாவுக்காக இனி ஆட முடியாது என்று தெரிந்தவுடன், இரண்டாம் கரியரை முன்னதாகத் தொடங்குவதே சரியான முடிவு. வாழ்க்கை கிரிக்கெட்டைவிட பெரிது” என பதிலளித்தார்.
பிரியங்க் பஞ்சல் 127 முதல் தர போட்டிகளில் 8,856 ரன்கள் (சராசரி 45.18) எடுத்துள்ளார். இதில் 29 சதங்கள், 34 அரைசதங்கள் அடங்கும். இவரது அரைசதத்தை சதமாக மாற்றும் விகிதம், விராட் கோலிக்கும் சமமானது. 97 லிஸ்ட்-ஏ போட்டிகளில் 3,672 ரன்கள் (சராசரி 40.80), 8 சதங்கள், 21 அரைசதங்கள்; 59 டி20 போட்டிகளில் 1,522 ரன்கள், 9 அரைசதங்கள் எடுத்துள்ளார்.
இந்திய அணியில் இரண்டு முறை இடம்பெற்ற பஞ்சல், 2021-ல் ரோஹித் சர்மா காயமடைந்தபோது இங்கிலாந்து தொடருக்கு மாற்று ரிசர்வ் வீரராக அழைக்கப்பட்டார். 2016-17 ரஞ்சி சீசன் அவரது பொற்காலம். அப்போது 1,310 ரன்கள் குவித்து, 314 நாட் அவுட் என்ற தனது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தார். அத்துடன் குஜராத் அந்த சீசனில் ரஞ்சி கோப்பையை வென்றது. 2015-16 விஜய் ஹசாரே கோப்பை வெற்றியிலும், 2012-13 மற்றும் 2013-14 சையத் முஷ்டாக் அலி டிராபி வெற்றிகளிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.