அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு தண்டனை – உச்ச நீதிமன்றம் உறுதி
தற்போது டெல்லி துணை நிலை ஆளுநராக உள்ள வி.கே. சக்சேனா, 25 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் அரசு சாரா அமைப்பொன்றின் தலைவராக இருந்தார். அப்போது, நர்மதை பாதுகாப்பு இயக்கத்திற்கு அவர் அளித்த காசோலை வங்கியில் கணக்கு இல்லாத காரணத்தால் திரும்பியதாக அதன் தலைவர் மேதா பட்கர் குற்றம் சாட்டினார். மேலும், சக்சேனாவை கோழை, தேசபக்தியற்றவர், ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டவர் என அவர் விமர்சித்தார்.
இதையடுத்து, வி.கே. சக்சேனா தொடர்ந்த அவதூறு வழக்கில், விசாரணை நீதிமன்றம் மேதா பட்கருக்கு 5 மாத சிறைத் தண்டனை விதித்தது. ஆனால், சிறைத் தண்டனைக்கு பதிலாக நன்னடத்தைக்கான உத்தரவின் அடிப்படையில், ஓராண்டில் விடுதலை செய்ய கூடுதல் அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை டெல்லி நீதிமன்றமும் உறுதி செய்தது. பின்னர், மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர் சிங் அமர்வு, டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட மறுத்தது. இருப்பினும், மேதா பட்கருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டது.