இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்: அயர்லாந்து அதிபர் கண்டனம்
டப்ளின்: கடந்த சில வாரங்களாக அயர்லாந்தில் வாழும் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி சார்ந்த தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதையடுத்து அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் இதற்கெதிராக கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“இந்தியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல் மிகவும் வெறுக்கத்தக்கது. இது நமது மதிப்புகளுக்கு முரணாகும் செயல். இத்தகைய நிகழ்வுகள் நம் அனைவரையும் தாழ்த்தும். அயர்லாந்து சமூகத்தில் இந்தியர்கள் வழங்கும் முக்கிய பங்களிப்பை இது மறைக்கும் விதமாகும்.
வாழ்வாதாரம் தேடி இங்கு வந்தவர்களை நாம் மரியாதையுடன் அணுக வேண்டும். இந்தியா-அயர்லாந்து இடையேயான ஆழமான வரலாற்று தொடர்புகளை மறக்கக்கூடாது. அது விடுதலை போராட்டத்திலிருந்து தொடங்கியது. இனவெறி மற்றும் வன்முறை ஊக்குவிக்கும் பேச்சுகள் தனிநபர்களுக்கு பாதிப்பை மட்டுமல்ல, அயர்லாந்து சமூகத்தின் அடிப்படை ஒற்றுமையையும் பாதிக்கும்” எனக் கூறினார்.
அதிமுக நிகழ்வுகளில் சில சம்பவங்கள்:
- கடந்த ஜூலை 19-ஆம் தேதி, 40 வயது இந்திய அமேசான் ஊழியர் ஒருவருக்கு அயர்லாந்தில் தாக்குதல் நடந்தது. அவரது முகத்தில் காயமும் ஆடையில் கிழியும் சேதமும் ஏற்பட்டது.
- டப்ளின் நகரில் 32 வயதான மற்றொரு இந்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, எலும்பு முறிவு ஏற்பட்டது.
- லக்விர் சிங் என்ற இந்தியர் மீது ‘நீ உன் நாட்டுக்கு திரும்பு’ என்று கூறி தாக்குதல் நடந்தது.
- ஆகஸ்ட் 6-ஆம் தேதி, சைக்கிளில் பணிக்கு சென்ற மற்றொரு இந்தியருக்கும் மற்றும் அதே நாளில் 6 வயது சிறுமி மீதும் சிறுவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்தச் சூழலில், அயர்லாந்து அதிபர் மேற்கண்ட கண்டனத்தை தெரிவித்தார்.
மேலும், அயர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், வெளிநாட்டினர் மீது இனவெறி தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து, இந்திய மக்களுக்கு முன்னெச்சரிக்கை வகையில் அறிவுறுத்தி உள்ளது.