நீதிபதி யஷ்வந்த் பதவிநீக்க விவகாரம் – 3 பேர் குழு அமைத்து விசாரிக்க மக்களவை சபாநாயகர் உத்தரவு
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில், கடந்த மார்ச் 14 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தியபோது, ஒரு அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக இருந்த பணம், பாதியாக எரிந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தையடுத்து, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றினார். பின்னர், விசாரணைக்காக தலைமை நீதிபதி ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது.
அறிக்கையின் அடிப்படையில், யஷ்வந்த் வர்மா பதவி விலகுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். ஆனால் அவர் மறுத்ததால், அவரை பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.