“எனது படம் உள்ள டி-ஷர்ட்களை அணிய அவர்களுக்கு உரிமை யார் கொடுத்தது?” – பிரியங்காவுக்கு மின்டா தேவியின் கேள்வி
பிரபலமான வாக்காளர் பட்டியல் முறைகேடு சர்ச்சையின் போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை குறிவைத்து மின்டா தேவி, “எனது படம் இடம்பெற்ற டி-ஷர்ட்களை அணிய அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஹாரில் சிறப்பு திருத்தங்களுக்கும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பிரியங்கா காந்தி, ஆர்.சுதா உள்ளிட்ட சில எம்.பிகள் மின்டா தேவி படம் அடங்கிய டி-ஷர்ட்களை அணிந்திருந்தனர். டி-ஷர்டின் பின்புறத்தில் “124 நாட் அவுட்” என்று எழுத்து இருந்தது.
அவர்களின் குற்றச்சாட்டுப்படி, பிஹார் வாக்காளர் பட்டியலில் 124 வயது மின்டா தேவியின் பெயர் முதல்முறையாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து ராகுல் காந்தி, “இதுபோல் பல நிகழ்வுகள் உள்ளன, மேலும் வெளிவருகின்றன” என்று தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி, “பிஹார் வாக்காளர் பட்டியலில் போலியான பெயர்கள் மற்றும் முகவரிகள் நிறைய உள்ளன” என்று கூறினார்.
சிவான் மாவட்டத்தின் தரவுண்டா சட்டப் பேரவை தொகுதியில் வாக்காளராக பதிவாகிய மின்டா தேவி உண்மையில் 35 வயதாக இருக்கிறார், 124 அல்ல. தேர்தல் ஆணைய அதிகாரி கூறுகையில், “மின்டா தேவியின் விண்ணப்பப் படிவத்தில் உள்ள பிழை காரணமாக அவரது வயது வாக்காளர் பட்டியலில் தவறாக உள்ளதாகத் தெரிய வருகிறது” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு பேசிய மின்டா தேவி, “பிரியங்கா, ராகுல் எனக்கென்ன உறவு? எனது படம் உள்ள டி-ஷர்ட்களை அணிய அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? அரசாங்கத்திலிருந்து இதற்கான எந்த தொடர்பும் இல்லை. திடீரென அவர்கள் எனக்கு நலம்செய்ய விரும்புகிறார்கள் என்று தோன்றியது, ஆனால் எனக்கு அது தேவையில்லை.
ஆனால், வாக்காளர் பட்டியலில் எனது விவரங்களில் முரண்பாடுகள் உள்ளன. அவற்றை திருத்த வேண்டும். ஆதார் அட்டையின்படி என் பிறந்த தேதி ஜூலை 15, 1990. ஆனால் வாக்காளர் பட்டியலில் என் வயது 124 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை யார் பதிவுசெய்தாரோ தெரியவில்லை, ஆனால் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு செய்தார்களா என்பதும் சந்தேகம். அரசாங்கத்தின் பார்வையில் எனக்கு 124 வயது என்றால், ஏன் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை? எனவே என் விவரங்களை சரி செய்யவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.