முதல் நாள் வசூலில் சாதனை நோக்கி ரஜினியின் ‘கூலி’

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம், முதல் நாள் வசூலில் புதிய சாதனையை எட்டும் நிலையில் இருப்பதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரும் எதிர்பார்ப்பில் இன்று (ஆகஸ்ட் 14) வெளியாகியுள்ள இந்த படம், தமிழகத்தில் காலை 9 மணிக்கும், மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கும் முதல் காட்சியாக திரையிடப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் டிக்கெட் முன்பதிவில் பல சாதனைகளை முறியடித்துள்ள ‘கூலி’, முதல் நாளில் குறைந்தது ரூ.150 கோடியைத் தாண்டி வசூலிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

தற்போது, தமிழ் படங்களில் உலகளவில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் ரூ.148 கோடி வசூலுடன் ‘லியோ’ ஆகும். ஆனால் ‘கூலி’ அதை தாண்டும் வாய்ப்பு அதிகம். வட இந்தியாவை தவிர்த்து மற்ற மாநிலங்களில், குறிப்பாக ஆந்திராவில், ஜூனியர் என்.டி.ஆர் – ஹிரித்திக் ரோஷன் நடித்த ‘வார் 2’ படத்தை விட ‘கூலி’க்கு அதிக முன்பதிவு நடைபெற்றுள்ளது.

நிலவரப்படி, ‘கூலி’ முதல் நாள் வசூல் ரூ.160 கோடிக்கு நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், தமிழ் சினிமாவின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்கும் படமாக ‘கூலி’ அமைந்துவிடும். குறிப்பிடத்தக்கது, ‘லியோ’ மற்றும் ‘கூலி’ ஆகிய இரண்டையும் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

Facebook Comments Box