தாய்லாந்து மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் பலி

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சாடுசக் பகுதியில் மிகப்பெரிய காய்கறி சந்தை இயங்கி வருகிறது. இங்கு மக்கள் வழக்கம்போல் நேற்று காலை பரபரப்பாக பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து பாதுகாவலர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் நால்வர் பாதுகாவலர்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் குற்றவாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் கொலையாளி உட்பட மொத்தம் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக பாங்காக் போலீஸார் தெரிவித்ததாவது:

“துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தாய்லாந்து–கம்போடியா இடையிலான மோதல் போக்கு இந்த சம்பவத்துக்கு காரணமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box