புதினை அடுத்து திங்களன்று ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் ட்ரம்ப்!

ரஷ்ய தலைவர் விளாதிமிர் புதினுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு, வரும் திங்கள்கிழமை உக்ரைன் தலைவர் விளாதிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க தலைவர் டொனால்டு ட்ரம்ப் சந்திக்க உள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், “அலாஸ்காவில் நடந்த சந்திப்பு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் இருந்தது. ரஷ்ய தலைவர் விளாதிமிர் புதினுடன் நடந்த சந்திப்பு மிகவும் சிறப்பானது. உக்ரைன் தலைவர் ஜெலன்ஸ்கி, மதிப்புக்குரிய நேட்டோ செயலாளர் உட்பட பல ஐரோப்பிய தலைவர்களுடன் நேற்றிரவு தொலைபேசியில் பேசியேன்.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான கடுமையான போரை முடிக்க சிறந்த வழி, நேரடியாக அமைதி ஒப்பந்தம் செய்து விடுவதே என்று அனைவரும் முடிவு செய்தனர். இது ஒரு (தற்காலிக) போர் நிறுத்த ஒப்பந்தம் அல்ல. அதுபோல நடந்தால் நிலைத்திருக்காது.

அதிபர் ஜெலன்ஸ்கி திங்கள்கிழமை மதியத்தில் வெள்ளை மாளிகையை வருவார். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், நாங்கள் ரஷ்ய தலைவர் புதினுடன் சந்திப்பை ஏற்பாடு செய்யலாம். இதனால் பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.

அலாஸ்கா சந்திப்பு: முன்னதாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க தலைவர் ட்ரம்ப் – ரஷ்ய தலைவர் புதினுக்கிடையிலான சந்திப்பு நடைபெற்றது. புதினுக்கு அமெரிக்க அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. ரஷ்ய தரப்பில், புதினுடன் வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ், நிதியமைச்சர் அண்டன் சிலுன்னோவ் மற்றும் 2 மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பில் அமெரிக்க-ரஷ்ய உறவுகள், உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் ட்ரம்ப் – புதின் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது புதின் கூறினார்:

“நமது நாடுகள் பொதுவான எதிரிகளுடன் எவ்வாறு போராடுகின்றன என்பதை நினைவில் வைக்க வேண்டும். இந்த பாரம்பரியம் எதிர்காலத்தில் உதவும். உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற ட்ரம்பின் கருத்துடன் நான் ஒப்புக்கொள்கிறேன். பரஸ்பர ஒப்பந்தம் உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.”

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் கூறினார்:

“புதினுடன் இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. ஆனால் 3 மணி நேர சந்திப்பில் உக்ரைன் போர் நிறுத்த தொடர்பில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.”

மேலும், “இதைச் செய்வது தற்போது ஜெலன்ஸ்கியின் பொறுப்பாகும். ஐரோப்பிய நாடுகள் கொஞ்சம் தலையீடு செய்யலாம், ஆனால் முழு பொறுப்பு ஜெலன்ஸ்கியின்” என்றும் அவர் கூறினார்.

Facebook Comments Box