‘கூலி’க்கு ‘ஏ’ சான்றிதழ்: தயாரிப்பாளர் எல்ரெட் குமார் காட்டம்
ரஜினியின் நடிப்பில் வெளிவந்த ‘கூலி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தனது பதிவில் கூறியுள்ளார்.
படம் தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது. இதைப் பற்றி கவலைப்படாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டது. வசூல் ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்று, படம் 2 நாட்களில் ரூ.270 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:
“‘கூலி’ பார்த்தேன். லோகேஷ் கனகராஜ் அற்புதமாக இயக்கியுள்ளார். ரஜினி சார் எப்போதும் போலவே சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கேற்ப ஆச்சரியப்படுத்துகிறார். அனிருத்தின் இசை படம் முழுக்கவே ஒரு அற்புத அனுபவத்தை கொடுத்துள்ளது.
அதிக வன்முறை உள்ள பிறமொழிப் படங்களுக்கு U/A சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் ‘கூலி’ படத்திற்கு மட்டும் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இது தேவையில்லாததாகும் மற்றும் கொஞ்சம் குழப்பமாக உள்ளது. தமிழ் திரையுலகம் இப்போது ஒன்றிணைய வேண்டிய நேரம்”
இவர் மட்டுமின்றி இணையத்தில் பலரும் ‘கூலி’ படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதை பற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமிழகத்தில் பல திரையரங்குகளில் குழந்தைகளை அனுமதிக்காததால், சில இடங்களில் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.