ஓஎன்ஜிசியின் எண்ணெய் உற்பத்தி குறைந்தது: செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் தகவல்

காரைக்கால் மாவட்டம் நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்) காவிரி அசட் நிர்வாக அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. விழாவில், ஓஎன்ஜிசி செயல் இயக்குநர் மற்றும் காவிரி அசட் மேலாளர் உதய்பாஸ்வான் தேசியக் கொடியை ஏற்றி, காவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 700 டன் இருந்து 600 டன் வரை குறைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின் காரணமாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக துரப்பண பணிகளை செய்ய பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் துரப்பண பணிகள் நிறைவேற முடியாமல் உள்ளது. தமிழக அரசு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நிலக்கரிக்கு மாற்றாக இயற்கை எரிவாயு மூலம் மின்சார உற்பத்தி செய்ய முடியும். இது சுற்றுச்சூழலை பாதிக்காது மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஓஎன்ஜிசி தற்போது பசுமை எரிசக்தி (சூரிய சக்தி, காற்றாலை) மூலம் மின்சார உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

தொடர்ந்து, ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Facebook Comments Box