இந்தியில் ‘கூலி’ படத்துக்கு வரவேற்பு: திரையரங்குகள் அதிகரிப்பு
இந்தியில் ‘கூலி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தின் இந்தி வெளியீட்டு உரிமையினை பென் மீடியா கைப்பற்றி வெளியிட்டது. இதில் ஆமிர்கான் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதே வேளையில் ‘வார் 2’ படமும் வெளியானதால் எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்தது.
தற்போது ‘வார் 2’ மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்வியை தழுவி இருக்கிறது. அதே வேளையில், இதர மாநிலங்களை விட வட இந்தியாவில் ‘கூலி’ படத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. வட இந்தியாவில் மொத்தமாக 3000 முதல் 3500 வரையிலான திரையரங்குகளில் ‘கூலி’ வெளியிடப்பட்டது. மக்களிடையே வரவேற்பினால் இப்போது 4500-5000 திரையரங்குகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
‘கூலி’ படத்துக்கு கலவையான விமர்சனங்களே பெற்றுள்ளன. ஆனால், இப்படத்தினை விட ‘வார் 2’ மிக மோசமான விமர்சனங்களை பெற்றதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. முதல் 2 நாட்களில் 240 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது ‘கூலி’.