இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனைகளில் தேர்ச்சி
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை விரைவில் அறிமுகமாவதற்கு முன்பாகவே முக்கிய சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு பாரம்பரிய மலைப்பாதைகளில் “ஹைட்ரஜன் பார் ஹெரிட்டேஜ்” திட்டத்தின் கீழ் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) உருவாக்கப்பட்ட இந்த ரயில், சுத்தமான எரிசக்தி ஆதாரமான ஹைட்ரஜன் எரிபொருளில் இயக்கப்படுகிறது. பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்குகளை அடையும் வகையில் பசுமை போக்குவரத்து தொழில்நுட்பத்தை நோக்கி பயணத்தில் ஹைட்ரஜன் ரயில் இந்தியாவை முன்னோக்கி நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஐசிஎப் பொதுமையாளர் யு.சுப்பாராவ் கூறியதாவது: “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சுமை சோதனைகளை இந்த ரயில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதன் செயல்பாட்டில் சிறப்பான முன்னேற்றம் காணப்படுகிறது. இதை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.”
ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் இடையிலான 89 கி.மீ. நீளமுள்ள வழித்தடத்தில் முதல் ஹைட்ரஜன் ரயில் தொகுப்பின் கள சோதனைகளை இந்திய ரயில்வே மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையங்கள் வடக்கு ரயில்வேயின் டெல்லி பிரிவின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் வருகின்றன.
பெரும்பாலான நாடுகள் 500–600 குதிரைத்திறன் (HP) வரையிலான ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்கியிருந்தாலும், இந்தியா 1,200 குதிரைத்திறன் (HP) திறன் கொண்ட இன்ஜின் ஒன்றை உருவாக்கி முக்கிய முன்னேற்றத்தை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.