கொரோனா, கல்வான் மோதலுக்கு பின் இந்தியா–சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை
இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. 2019-ஆம் ஆண்டில் மட்டும் 539 நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. அப்போது ஏர் இந்தியா, இண்டிகோ, சைனா சதர்ன், சைனா ஈஸ்டர்ன் போன்ற விமான நிறுவனங்கள் சேவையில் ஈடுபட்டன.
ஆனால் 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இரு நாடுகளுக்கிடையேயான சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. அதே ஆண்டின் ஜூன் மாதத்தில் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன படைகள் அத்துமீறி நுழைந்து மோதலில் ஈடுபட்டது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து நேரடி விமான சேவையும் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்கா சீனாவுக்கு கூடுதல் வரி விதித்ததையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்க இந்தியா–சீனா இணைந்து நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளன. இதற்காக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து, விரைவில் இந்தியா–சீனா இடையே நேரடி விமான சேவை தொடங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து துறையினர் கூறுகையில், “சீனாவின் பக்கம் நாளை மறுநாளே சேவையை தொடங்க தயாராக உள்ளது. ஆனால் இந்திய விமானங்கள் அங்கு செல்லுவதற்கு சில விதிமுறைகள் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. எனவே மிக விரைவில், அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள், இரு நாடுகளுக்கிடையேயான சேவை தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.
மேலும், இரு நாடுகளுக்கிடையே உள்ள விமான சேவை ஒப்பந்தம் (ASA) திருத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான ஆலோசனைகள் இரு தரப்பும் நடத்தி வருகின்றன. தற்போதைய ஒப்பந்தத்தை பின்பற்றலாமா அல்லது புதிய மாற்றம் செய்ய வேண்டுமா என்பதில் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.
இந்த மாத இறுதியில் சீனாவின் டியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது இந்தியா–சீனா இடையேயான நேரடி விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.