ஒருநாள் கிரிக்கெட் பந்து வீச்சு தரவரிசை: முதலிடத்தை கைப்பற்றிய கேசவ் மகராஜ்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் கேசவ் மகராஜ் 5 விக்கெட்களை வீழ்த்தி சிறப்பாக விளையாடினார். இதன் மூலம் அவர் 687 புள்ளிகளுடன் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பெற்றார். 2023 நவம்பர்–டிசம்பர் மாதங்களுக்கு பின் மீண்டும் தரவரிசை பட்டியலில் உச்சியை தொட்டுள்ளார்.
இலங்கையின் மஹீஷ் தீக்ஷனா, இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு இடம் பின்தங்கி முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளனர். டாப் 10 பட்டியலில் குல்தீப் யாதவுடன் சேர்ந்து இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றுள்ளார். அவர் 616 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஜெய்டன் சீல்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் அடிப்படையில் அவர் 15 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் ஷுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அதே அணியின் ஸ்ரேயஸ் ஐயர் 6-வது இடத்தில் உள்ளார்.
டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் அபிஷேக் சர்மா, திலக் வர்மா முதலிரு இடங்களைப் பிடித்துள்ளனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6-வது இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10-வது இடத்திலும் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரேவிஸ் 9 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை அடைந்துள்ளார்.