ரூ.62,000 கோடிக்கு 97 தேஜஸ் 1ஏ போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் – எச்ஏஎல்
இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்திடமிருந்து ரூ.62,000 கோடி மதிப்பில் 97 தேஜஸ் மார்க்-1ஏ ரக இலகு போர் விமானங்களை வாங்க மத்திய அரசு இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது. விமானப்படையில் தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய மிக்-21 போர் விமானங்களுக்கு மாற்றாக தேஜஸ் உள்நாட்டு விமானங்கள் சேர்க்கப்படவுள்ளன.
ஏற்கனவே விமானப்படையில் 40 தேஜஸ் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்பின் ரூ.48,000 கோடிக்கு 83 தேஜஸ் மார்க்-1ஏ விமானங்களை வாங்க அரசு ஆர்டர் செய்தது. ஆனால், இவைக்கு தேவையான இன்ஜினை வழங்குவதில் அமெரிக்கா தாமதம் செய்ததால், விநியோகம் திட்டமிட்டபடி நடைபெறவில்லை.
இதுகுறித்து விமானப்படை தளபதி அதிருப்தி தெரிவித்திருந்தார். பின்னர் அமெரிக்காவில் இருந்து இன்ஜின் கிடைத்தவுடன் விமானங்களை ஒப்படைப்போம் என்று எச்ஏஎல் நிறுவனம் உறுதியளித்தது. விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டாலும், உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். அவர் நேரடியாக தேஜஸ் பயிற்சி விமானத்தில் பறந்து தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், தற்போது ரூ.62,000 கோடி மதிப்பில் கூடுதலாக 97 தேஜஸ் மார்க்-1ஏ போர் விமானங்களை எச்ஏஎல் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் 65 சதவீதத்துக்கும் அதிகமாக உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும், 200 தேஜஸ் மார்க்-2ஏ மற்றும் 5-ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெற HAL நிறுவனம் தீவிரமாக முயற்சித்து வருகிறது.