இனி விண்வெளியில் இந்தியாதான் முன்னணி!
40 மாடிக் கட்டிட உயரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? — அதே அளவிலான பிரமாண்ட ராக்கெட்டை உருவாக்கும் பணியில் தற்போது இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதைப் பற்றிய முழு விவரம் இதோ.
உலக அரங்கில் இந்தியா மதிப்புமிக்க இடத்தைப் பெற்றதற்கான மிகப்பெரிய காரணம் விண்வெளித் துறையில் அடைந்த சாதனைகள்தான். வல்லரசுகளுக்கும் கடினமாகத் தோன்றிய பல வெற்றிகளை இந்தியா எளிதில் அடைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ராக்கெட் ஏவுதலில் சில நாடுகள் தோல்வியுறும் நிலையில், அவற்றைத் தாண்டி இந்தியா நிலவிலும் தனது அடிச்சுவட்டை பதித்துவிட்டது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் திறனைக் கண்டு, வெளிநாடுகளும் தங்களது செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக இந்தியாவையே நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான் திட்டம்’ முன்னேற்றமுடன் சென்று கொண்டிருக்க, தற்போது அதைவிட வித்தியாசமான புதிய இலக்கை இஸ்ரோ குறிவைத்து செயல்படுகிறது. ஆரம்பத்தில் 35 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களையே புவிவட்டப்பாதையில் நிறுத்திய இந்தியா, அதை படிப்படியாக அதிகரித்து தற்போது 75 ஆயிரம் கிலோ வரை உயர்த்தும் முயற்சியில் உள்ளது.
அதற்காகவே 40 மாடிக் கட்டிட உயரத்தில் இருக்கும் மிகப்பெரிய ராக்கெட்டை தயாரித்து வருவதாக, இந்திய விண்வெளி ஆய்வு அமைப்புத் தலைவர் வி. நாராயணன் உறுதி செய்துள்ளார்.
தகவல் தொடர்பு, வானிலை கண்காணிப்பு, பூமி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக தற்போது 55 செயற்கைக்கோள்கள் இந்தியாவிடம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் 3 முதல் 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
75 ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களையும் சுமந்து செல்லும் இந்த அசாத்திய ராக்கெட் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால், “விண்வெளி துறையின் ராஜா இந்தியாதான்” என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.