பாகிஸ்தானுக்கு 3-வது ஹேங்கர் வகை நீர்மூழ்கிக் கப்பலை வழங்கிய சீனா!
பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வரும் சீனா, அந்த நாட்டுக்கு 3-வது ஹேங்கர் வகை நீர்மூழ்கிக் கப்பலை ஒப்படைத்துள்ளது. இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த நடவடிக்கை கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான், இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால் அவை அனைத்தும் இந்திய வான் பாதுகாப்பால் தடுக்கப்பட்டன. அதேசமயம், இந்தியாவின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை பாதித்து, விமானப்படை தளங்களை சேதப்படுத்தின. நான்கு நாட்கள் நீடித்த மோதலின் பின், பாகிஸ்தான் சமரசம் செய்ய வேண்டிய நிலைக்கு வந்தது.
இந்த காலப்பகுதியில், பாகிஸ்தான் சீன தயாரிப்பு ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன், செயற்கைக்கோள் ஆதரவும், வான் பாதுகாப்பு உதவியும் சீனா வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவை எதிர்பார்த்தளவில் செயல்படவில்லை என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்தியப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சீன தயாரிப்பான PL-15E அதிநவீன ஏவுகணை பாகங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டனர்.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 2020 முதல் 2024 வரை பாகிஸ்தான் வாங்கிய ஆயுதங்களில் சுமார் 81 சதவீதம் சீனாவிலிருந்தே பெற்றதாகும். கடற்படை ஆதிக்கத்தை பெருக்க, சீனா பாகிஸ்தானின் க்வாடார் துறைமுகத்தை மேம்படுத்தி வருவதோடு, கடந்த 4 ஆண்டுகளில் 4 அதிநவீன போர் கப்பல்களையும் வழங்கியுள்ளது.
அதோடு, பாகிஸ்தானுக்கு மொத்தம் 8 ஹேங்கர் வகை நீர்மூழ்கி கப்பல்களை வழங்க திட்டமிட்டுள்ள சீனா, இதில் 2-வது கப்பலை கடந்த மார்ச் மாதமே ஒப்படைத்தது. தற்போது 3-வது நீர்மூழ்கி கப்பலும் சீனாவின் ஹீபே மாகாணம், வுஹானில் நடைபெற்ற விழாவில் பாகிஸ்தானுக்கு ஒப்படைக்கப்பட்டது.
அந்த நிகழ்வில் பேசிய பாகிஸ்தான் கடற்படை வைஸ் அட்மிரல் அப்துல் சமத், “இந்த ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலின் மேம்பட்ட ஆயுதங்களும், உயர் தர சென்சார்களும் பிராந்திய சமநிலையை காப்பதற்கும், கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உதவும்” எனக் குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான், சீனாவிடமிருந்து ரிஸ்வான் உளவு கப்பல், 600-க்கும் மேற்பட்ட VT-4 பீரங்கிகள், 36 J-10CE 4.5 ஜெனரேஷன் போர் விமானங்கள், JF-17 போர் விமானங்கள் போன்றவற்றையும் பெற்றுள்ளது. இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்ற நிலை நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான்–சீனா இராஜதந்திர, ராணுவ உறவுகளை இந்தியா மிகுந்த கவனத்துடன் நோக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.