ராணுவ பயிற்சியில் படுகாயமடைந்ததால் மாற்றுத் திறனாளியான விவகாரம்: வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம்
தேசிய பாதுகாப்பு அகாடெமி, இந்திய ராணுவ அகாடெமி உள்ளிட்ட ராணுவப் பயிற்சி பள்ளிகளில் பயில்பவர்கள் சில நேரங்களில் பயிற்சியின்போது படுகாயமடைந்து மாற்றுத்திறனாளியாகி விடுவது உண்டு. இதுபோன்ற சூழ்நிலையில், அவர்களை பணியில் சேர்க்காமல் வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். இவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் என்ற அந்தஸ்தும் வழங்கப்படுவதில்லை.
இதனால், முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழ் ராணுவ மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. பணியில் சேர்ந்த பிறகு காயம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கண்ட சலுகைகளை பெற முடியும் என ராணுவம் தெரிவிக்கிறது.
ராணுவ பயிற்சியின்போது காயமடைந்து மாற்றுத்திறனாளியாகிவிட்டதால் வேறு வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுபோன்ற சூழலில் மருத்துவ செலவுகள் ஒரு பக்கம் நெருக்கடி தருகிறது. இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது.
இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.