தேன்கனிக்கோட்டை பகுதியில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள்!
தேன்கனிக்கோட்டை சுற்றியுள்ள மலைக் கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் அறியாமையும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையும் காரணமாக, போலி மருத்துவர்கள் பெருகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் 500-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமையால், கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சைக்காக நகரப் பகுதிகளை நாடி வருகின்றனர்.
கெலமங்கலம், தளி வட்டாரத்தில் 13 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 60-க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆனால், மருத்துவக் கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் செவிலியர்கள் குறைவால் கிராம மக்களுக்கு தேவையான சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால், கிராம மக்கள் மருத்துவம் படிக்காதவர்களின் அலோபதி சிகிச்சை மையங்களை நாடி வருகின்றனர். இதையே பயன்படுத்தி போலி மருத்துவர்கள் அதிகரித்துள்ளனர்.
சமூக ஆர்வலர் கருத்து:
“தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், உரிகம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு கல்வி, சுகாதார வசதிகளை மேம்படுத்தாமல் இருப்பதோடு, உயர் அதிகாரிகள் பார்வையும் இல்லாததால் போலி மருத்துவர்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி கிளினிக், மருந்தகங்களில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிக அளவு மருந்துகள் கொடுப்பதால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. புகார் வந்தால் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுகிறது; ஆனால் பின்னர் மீண்டும் அதே நிலை தொடர்கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து, போலி மருத்துவர்களை கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.
அரசு மருத்துவர் எச்சரிக்கை:
“கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம். காய்ச்சலின் காரணத்தை பரிசோதிக்காமல், சீராய்டு மற்றும் அதிக டோஸ் மருந்துகளை வழங்குகின்றனர். இதனால் உடனடியாக காய்ச்சல் குறைந்தாலும், பக்கவிளைவுகள் கடுமையாகிறது. குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்பதால், மக்கள் குறைந்த கட்டணத்தில் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுகின்றனர். பின்னர் பக்கவிளைவுகளைச் சந்திக்கின்றனர். பல நேரங்களில் உயிரிழப்பு நடந்தால், பஞ்சாயத்து முறையில் மறைத்து விடுகின்றனர். கூடவே, ‘மூனி அடித்துவிட்டது’, ‘பேய் பிடித்துவிட்டது’ என்று மூடநம்பிக்கையை பரப்புகின்றனர். கிராம மக்களுக்கு விழிப்புணர்வு தேவை” என்றார்.