“இந்த பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தும்” – ஆகிப் ஜாவேத் நம்பிக்கை
வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட்டுக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடியாக, முன்னணி வீரர்களான பாபர் அசம் மற்றும் முகமது ரிஸ்வான் அணியில் இடம் பெறவில்லை. இருப்பினும், இந்த புதிய அணிக்குத் இந்தியாவை வெல்லும் திறன் உண்டு என்கிறார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தலைமைத் தேர்வாளருமான ஆகிப் ஜாவேத்.
செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் வழக்கம்போல் ரசிகர்களிடையே பெரும் ‘ஹைப்’ ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி (ஆசிய கோப்பை):
சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபாஹீம் அஷ்ரப், ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்ஸான், சஹீப் ஸாதா ஃபர்ஹான், சல்மான் மிர்ஸா, ஷாஹீன் ஷா அப்ரிடி, சுஃப்யான் மொகிம்.
பாபர் அசம் தனது ஸ்ட்ரைக் ரேட்டை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவே மிகப் பெரிய தவறு என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல், கேப்டனாக இருந்த ரிஸ்வானை விலக்கிய முடிவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் ஹெட் கோச் மைக் ஹெஸன் கூறுகையில்:
“பாபர் அசம் சமீபத்திய ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் நன்றாக ஆடினார். ஆனால் பிறகு தோல்வியடைந்தார். குறிப்பாக சுழற்பந்து வீச்சிற்கு எதிராக அவர் விரைவில் ரன்கள் எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த முயற்சி செய்து வருகிறார்” என்றார்.
தற்போதைய அணியில் சீனியர்களாக ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப், ஃபகர் ஜமான் மற்றும் குஷ்தில் ஷா இருப்பது வலு சேர்க்கிறது. முகமது ஹாரிஸ் விக்கெட் கீப்பராகத் தக்கவைக்கப்பட்டுள்ளார். ஹசன் நவாஸ், சல்மான் மிர்ஸா, சுஃப்யான் மொகிம் போன்ற இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆகிப் ஜாவேத் கூறுகையில்:
“இந்த அணி ஆசியக் கோப்பையில் இந்தியாவை தோற்கடிக்கும். இந்தியா – பாகிஸ்தான் போட்டிதான் உலகின் மிகப்பெரிய மோதல். ஒவ்வொரு வீரரும் இதை உணர்கிறார்கள். இந்த அணி எந்த அணியையும் வெல்லும் ஆற்றல் கொண்டது. வீரர்கள் அனைவரும் சவாலுக்கு தயாராக உள்ளனர். இருநாடுகளின் சூழ்நிலை குறித்து இவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால் கூடுதல் அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை” என்றார்.