ஆப்கனிஸ்தானில் பேருந்து விபத்தில் 79 பேர் உயிரிழந்தனர். இதில் 19 குழந்தைகளும் அடங்குவர்.
ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் நேற்றிரவு (உள்ளூர் நேரம் இரவு 8.30) பேருந்து விபத்துக்குள்ளானது. ஈரானில் இருந்து திரும்பியவர்கள் பயணித்த அந்த பேருந்து, வடமேற்குப் பகுதியிலுள்ள ஹிராட் மாகாணத்தில் லாரி மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதியது. மோதியதும் பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதன் விளைவாக 19 குழந்தைகள் உள்பட மொத்தம் 79 ஆப்கனியர்கள் உயிரிழந்தனர் என உள்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் மடீன் கானி தெரிவித்தார்.
ஆப்கனிஸ்தானில் சாலை வசதிகள் போதாமை மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன. கடந்த சில மாதங்களில் ஈரானிலிருந்து 18 லட்சம் ஆப்கனியர்கள் தங்கள் நாட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டுள்ளனர். அதேபோல், கடந்த ஒரு வருடத்தில் பாகிஸ்தானிலிருந்து 1,84,459 பேர், துருக்கியில் இருந்து 5,000 பேர், மேலும் வெளிநாட்டு சிறைகளில் இருந்த சுமார் 10,000 ஆப்கனியர்கள் ஆப்கனுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வலுக்கட்டாய வெளியேற்றங்களை ஆப்கன் அரசு கடந்த ஜூலையில் கடுமையாக விமர்சித்தது. பாகிஸ்தான் மற்றும் ஈரான், ஆப்கனியர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் எனக் கூறி அவர்களை திருப்பி அனுப்புவதாக தலிபான்கள் கூறியுள்ளனர். ஆப்கன் அகதிகள் அமைச்சகத்தின் தகவலின்படி, தற்போது 60 லட்சம் ஆப்கனியர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.