ஆதாரை ஏற்காதது ஏன்? – தலைமை தேர்தல் ஆணையரிடம் முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய 7 கேள்விகள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று ஊடக சந்திப்பில் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் 7 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அதில் அவர், “இண்டியா கூட்டணியின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கூடுதல் கேள்விகளை மட்டுமே எழுப்பியுள்ளது. எனவே சில முக்கிய கேள்விகள் எழுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் எழுப்பிய 7 கேள்விகள்:

  1. வீடு தேடிச் சென்று கணக்கெடுப்பு செய்தபோதும், ஏராளமான தகுதியான வாக்காளர்கள் எவ்வாறு நீக்கப்பட்டனர்?
  2. புதிய வாக்காளர்களின் சேர்க்கை வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. 18 வயது நிறைவடைந்த இளைஞர்கள் அனைத்தும் பட்டியலில் சேர்க்கப்பட்டனரா? அவர்களின் விவரங்கள் என்ன?
  3. Registration of Electors Rules, 1960 படி உள்ள விசாரணை மற்றும் முறையீடு நடைமுறை காலக்கெடு, வரவிருக்கும் பீஹார் தேர்தலில் பல வாக்காளர்களை விலக்கக்கூடும். இதை ஆணையம் எவ்வாறு சரிசெய்யும்?
  4. பிற மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளும்போது, இந்நடைமுறைச் சிக்கல்களை ஆணையம் கருதுமா?
  5. மறைந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குமாறு 01/05/2025 அறிவிப்பின் பேரில் 17/07/2025 அன்று நாங்கள் மனு அளித்தோம். இது எப்போது செயல்படுத்தப்படும்?
  6. வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆதாரை, ஆணையம் ஏற்காததற்குக் காரணம் என்ன?
  7. “நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள் என்றால், ஏன் அது இன்னும் வெளிப்படையாகவும், வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கக்கூடாது?

பீஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவை சார்ந்து “வாக்கு திருட்டு சதி” செய்கிறது என்று குற்றம் சாட்ட, ராகுல் காந்தி கூட நேரடியாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “எங்களுக்கு எதிரிகளோ ஆதரவாளர்களோ இல்லை. எல்லா கட்சிகளுக்கும் சமமான அணுகுமுறையே உள்ளது. பீஹாரில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. வாக்கு திருட்டு, இரட்டை ஓட்டு போன்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. மக்கள் மனதை குழப்பும் முயற்சிகள் அரசியலமைப்பு சட்டத்தை அவமதிப்பதாகும்” என்று தெரிவித்தார்.

Facebook Comments Box