குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்த பிரதமர் மோடி
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனை இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
இந்த சந்திப்பை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான என் வாழ்த்துகளை தெரிவித்தேன். அவரது நீண்டகால பொதுச்சேவையும், நிலையான கள அனுபவமும் நமது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். அவர் இதுவரை வெளிப்படுத்திய அதே அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் தொடர்ந்து தேசத்திற்கு சேவை செய்வார் என நம்புகிறேன்” என குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, ராதாகிருஷ்ணனை கூட்டணியின் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருந்தார். கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்த பிறகு, வரும் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் துணைத் தலைவர் தேர்தலை சுமுகமாக நடத்த பாஜக நாடாளுமன்றக் குழு முடிவெடுத்தது.
தமிழகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஜூலை 31, 2024 முதல் மகாராஷ்டிராவின் 24-வது ஆளுநராகப் பணியாற்றி வருகிறார். அதற்கு முன் பிப்ரவரி 2023 முதல் ஜூலை 2024 வரை ஜார்க்கண்ட் ஆளுநராகவும், மார்ச் – ஜூலை 2024 காலகட்டத்தில் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார்.
பாஜக மூத்த தலைவரான அவர், கோயம்புத்தூர் மக்களவை தொகுதியிலிருந்து இரண்டு முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, தமிழக பாஜக மாநிலத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக, கடந்த ஜூலை 21-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தின் முதல் நாளிலேயே, அப்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடல்நலக்காரணங்களால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்த தேர்தல் நடைபெறுகிறது.