பாகிஸ்தானுக்கு 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கிக் கப்பல் – சீனா ஒப்படைப்பு!
பாகிஸ்தானுக்கு தொடர்ந்து இராணுவ உதவி வழங்கி வரும் சீனா, தற்போது 3-வது ஹேங்கர் வகை நீர்மூழ்கி கப்பலை அந்நாட்டிற்கு வழங்கியுள்ளது. இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நீடிக்கும் வேளையில் சீனாவின் இந்த நடவடிக்கை கவலைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்திய எல்லைப் பகுதிகளைத் தாக்க முயன்றது. ஆனால் அவை அனைத்தும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பால் தடுக்கப்பட்டன.
மாறாக, இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலால் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் சேதமடைந்து, விமானப்படைத் தளங்கள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து 4 நாட்கள் நீடித்த இந்த மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் கோரிக்கையின்படி தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. அந்தக் காலப்பகுதியில் சீன தயாரிப்பு ஆயுதங்களைப் பாகிஸ்தான் பயன்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும், சீனாவின் வான் பாதுகாப்பு வசதிகளும், செயற்கைக்கோள் ஆதரவுகளும் பாகிஸ்தானுக்கு கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், சீன ஆயுதங்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக இந்திய ராணுவம், பாகிஸ்தானில் பயன்படுத்தப்பட்ட சீன தயாரிப்பு PL-15E ஏவுகணையின் புகைப்படங்களையும் வெளியிட்டது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி, பாகிஸ்தான் கடந்த 2020 முதல் 2024 வரை வாங்கிய ஆயுதங்களில் சுமார் 81% சீனாவிலிருந்து பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் க்வாடார் துறைமுகத்தில் சீன கடற்படை வசதிகளை உருவாக்கி வருகிறது. அதோடு, பாகிஸ்தானின் கடற்படையை வலுப்படுத்த, கடந்த 4 ஆண்டுகளில் 4 அதிநவீன போர்க் கப்பல்களையும் சீனா வழங்கியுள்ளது.
மேலும், மொத்தம் 8 ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பல்களை வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த மார்ச் மாதம் 2-வது கப்பலை பாகிஸ்தானுக்கு ஒப்படைத்தது. தற்போது, ஹீபே மாகாணம் வுஹானில் நடைபெற்ற விழாவில் 3-வது ஹேங்கர் வகை நீர்மூழ்கி கப்பலும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பேசிய பாகிஸ்தான் கடற்படை வைஸ் அட்மிரல் அப்துல் சமத், “அதிநவீன ஆயுதங்கள் மற்றும் மேம்பட்ட சென்சார்கள் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், பிராந்திய சக்திசமநிலையையும் கடல்சார் பாதுகாப்பையும் உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து ரிஸ்வான் உளவு கப்பல், 600-க்கும் மேற்பட்ட VT-4 பீரங்கிகள், 36 J-10CE போர் விமானங்கள், JF-17 போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பெற்றுள்ளது. இந்தியா–பாகிஸ்தான் இடையிலான மோதல் நிலை குறையாத சூழலில், சீனா–பாகிஸ்தான் இடையேயான இந்த புதிய இராணுவ ஒத்துழைப்பை இந்திய அரசு தீவிரமாகக் கவனித்து வருகிறது.