“நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் இடிக்கப்படும்” – ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனின் காசா பகுதியை கட்டுப்படுத்தி வரும் ஹமாஸ் அமைப்பு இடையே, இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், இஸ்ரேல் முன்வைத்த நிபந்தனைகளை ஹமாஸ் நிராகரித்தது. இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் மீண்டும் விமானத் தாக்குதல் மேற்கொண்டது.
இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று தனது எக்ஸ் (X) தள பதிவில், “இஸ்ரேல் வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்காவிட்டால், குறிப்பாக அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்து ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால், ஹமாஸ் தலைமையகமாகக் கருதப்படும் காசா நகரமே அழிக்கப்படும்” எனக் கடுமையாக எச்சரித்தார்.
அதற்கு முன்னதாக, காசா நகரை முற்றுகையிட ராணுவத்துக்கு அனுமதி வழங்கியிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். தற்போது, காசா நகரை முழுமையாக கைப்பற்றும் நடவடிக்கையில் இஸ்ரேல் படைகள் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம், பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தவிர்க்க, மக்கள் தெற்குப் பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.