‘உடல் உறுப்பு திருட்டு கொடூரம், அபாயகரம்’ – தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கோரி உயர்நீதிமன்றம் உத்தரவு

உடல் உறுப்பு திருட்டு மிகவும் கொடூரமானதும் அபாயகரமானதும் எனக் கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, நாமக்கல் சிறுநீரக திருட்டு வழக்கின் விசாரணை மற்றும் மனித உடல் உறுப்புகள் விற்பனையைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

மனுவின் விவரம்:

பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி மற்றும் சாயாலை தொழிலாளர்களிடம் சட்டவிரோதமாக சிறுநீரகம் எடுக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு சிறுநீரகத்துக்கும் ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. இது 1994 ஆம் ஆண்டின் மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டத்துக்கு விரோதமானது என்றும் கூறப்பட்டது.

இவ்வழக்கில் அரசியல் பின்னணி உள்ளதால், மாநில காவல்துறை விசாரணை நியாயம் செய்யாது; எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என மனுதாரர் கோரினார்.

நீதிமன்ற விசாரணை:

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி உடல் உறுப்புகளை வாங்கும் சம்பவங்கள் நடந்துள்ளன; அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள்,

  • “சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வோரின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்வது கொடூரமானதும் அபாயகரமானதும்.
  • உயிர்வாழும் உரிமை அடிப்படை உரிமை; அதை பாதுகாப்பது அரசின் கடமை.
  • உடல் உறுப்புகளை பொருட்களைப் போல விற்பனை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது; அதற்கு கடும் நடவடிக்கை அவசியம்” எனக் குறிப்பிட்டனர்.

மேலும் நீதிமன்றக் கருத்துகள்:

மனுதாரர் தரப்பில், 6 பேர் சிறுநீரகம் தானம் செய்ததாகச் சொல்லப்பட்டாலும், அதில் 5 பேர் ஊரிலேயே இல்லையெனவும், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள்,

  • ஊடகங்களில் தினமும் செய்திகள் வெளியாகியும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
  • சிறுநீரகம் திருட்டு தெரியவரும் போதே மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
  • ஏழைகளின் சிறுநீரகங்கள் எப்போது திருடப்பட்டன என்பது கூடத் தெரியாமல், 10–15 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவருவது வேதனையானது.
  • மனித உடல் உறுப்புகள் விற்பனையைத் தடுக்க அரசு வழிமுறைகள் உருவாக்க வேண்டும் எனக் கவனுறுத்தினர்.

அடுத்த கட்ட நடவடிக்கை:

இந்த வழக்கில் சுகாதாரத் துறை தலைமைச் செயலர் மற்றும் ஊரக சுகாதார இயக்குநரை நீதிமன்றம் தாமாகவே எதிர்மனுதாரர்களாக சேர்த்தது.

சிறுநீரகம் விற்பனை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் உடல் உறுப்புகள் விற்பனையைத் தடுக்க மாநில அரசு உருவாக்கும் வழிமுறைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 21-க்கு ஒத்திவைத்தது.

Facebook Comments Box