சூர்யகுமார் கேப்டன், கில் துணை கேப்டன் – ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு அறிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஷுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை டி20 தொடர் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணியைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று (19ம் தேதி) மும்பையில் நடந்தது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வாளர்கள் 15 வீரர்களைக் கொண்ட அணியை அறிவித்துள்ளனர். இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறவுள்ளன.

இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.

ரிசர்வ் வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜுரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

இந்திய அணி எப்படி இருக்கும்?

  • தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் அதிக வாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களுடன் மூன்றாவது ஓப்பனராக ஷுப்மன் கில் இருப்பார். கடந்த ஆண்டு ஜூலையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு இப்போது தான் அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போது துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டதால், அவர் ஆடும் லெவனில் இடம்பெறுவது உறுதியானதாகவே கருதப்படுகிறது.
  • நடுவரிசையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா முக்கிய பங்காற்றுவார்கள். ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே (வேகப்பந்து வீச்சு), அக்சர் படேல் (சுழற்பந்து) இணைந்துள்ளனர். அக்சர் படேல் தேவைக்கேற்ப நடுவரிசை அல்லது பின் நடுவரிசையில் விளையாடும் திறன் கொண்டவர் என்பதால் அணி நிர்வாகம் அவரை ஆட்டநிலைக்கு ஏற்ப பயன்படுத்தும்.
  • ஃபினிஷர்கள்: ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங்.
  • சுழற்பந்து: வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ். துபாய் மைதானம் சுழற்பந்துக்கு உதவும் என்பதால் இவர்களுக்கு ஆடும் லெவனில் அதிக வாய்ப்பு உள்ளது.
  • வேகப்பந்து: ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா. இவர்களில் ஒருவருக்கு மட்டுமே ஆடும் லெவனில் இடமில்லாமல் போகலாம். குறிப்பாக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப்புக்கு வாய்ப்பு சாதகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
Facebook Comments Box