34 நாட்களில் 100 சட்டமன்ற தொகுதிகள்: எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின் செல்வாக்கு என்ன?
‘மக்களை காப்போம், தமிழ்நாடு மீட்போம் எழுச்சி நடை’ என்ற தலைப்பில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 34 நாட்களில் 100 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்துள்ளார்.
கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் பயணத்தைத் தொடங்கிய இபிஎஸ், 100-வது இடமாக ஆற்காட்டை சென்றடைந்தார். மேற்கு மண்டலத்தில் ஆரம்பித்து, வடக்கு, மத்திய, தெற்கு என மொத்தம் 10,000 கிலோமீட்டர் தாண்டி, 34 நாட்களில் 100 தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்தார்.
சுற்றுப்பயணத்திற்காக தயாரிக்கப்பட்ட பேருந்திலிருந்தே மக்களுடன் உரையாடி வரும் இபிஎஸ், விவசாயிகள், வணிகர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோருடன் 150-க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களில் பங்கேற்று அவர்களின் சிக்கல்களை நேரடியாக கேட்டறிந்தார்.
அதிமுக வெளியிட்ட தகவல்படி, இதுவரை 52 லட்சத்திற்கும் அதிகமான மக்களுடன் நேரடியாக உரையாடியதாகக் கூறப்படுகிறது. பேருந்துப் பயணத்தைத் தாண்டி, பல இடங்களில் நேரடியாக மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சுற்றுப்பயணம் அதிமுகவினருக்கு ஆரம்பத்திலேயே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், ‘அதிமுக மக்கள் பிரச்சினைகளை கவனிக்கவில்லை, இபிஎஸ் மக்களிடம் செல்வதில்லை’ என்று எதிர்க்கட்சிகள் கூறிய விமர்சனங்களையும் இந்தப் பயணத்தின் மூலம் உடைத்துள்ளார். இதையே தங்களின் மிகப்பெரிய சாதனையாக அதிமுகவினர் எடுத்துரைக்கின்றனர்.
இபிஎஸ் வருகை தரும் பகுதிகளில் அதிமுக ஆதரவாளர்கள் பெருமளவில் கூடி வருகிறார்கள். ஆரம்பத்தில் கூட்டம் குறையுமோ என்ற சந்தேகம் இருந்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் திரண்ட கூட்டம், அதிமுகவின் அடித்தள அமைப்பு இன்னும் வலுவாக செயல்படுகிறது என்பதைக் காட்டியது. மேலும், மண்டலம், மாவட்டம், ஒன்றியம், கிளை என அனைத்துத் தரப்பிலும் பொறுப்பாளர்களை நியமித்து திட்டமிட்ட முறையில் பயணத்தை நடத்தியதன் விளைவாகவே பெரிய கூட்டங்களை ஏற்படுத்த முடிந்தது.
சுற்றுப்பயண உரைகளில் இபிஎஸ் முக்கியமாக நான்கு அம்சங்களை முன்வைக்கிறார்:
- திமுக ஆட்சியின் தற்போதைய குறைகள்.
- நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள்.
- அதிமுக ஆட்சிக் கால சாதனைகள்.
- 2026 தேர்தலுக்கான வாக்குறுதிகள்.
அவர் தனது உரைகளில், திமுக ஆட்சியில் அதிகாரம் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், தேர்தலின்போது அளித்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் பேசுகிறார். அதே நேரத்தில், அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், விவசாயிகளுக்கான நிவாரணம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு, இலவச மடிக்கணினி, அம்மா உணவகம், அம்மா மருத்துவமனை, இருசக்கர வாகன மானியம், இலவச ஆடு-மாடு வழங்கல், பொங்கலுக்கு ரூ.2,500, விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களையும் எடுத்துரைக்கிறார்.
மேலும், 2026 தேர்தலுக்காக அவர் புதிய வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளார். அதில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்குவோம் என்ற அறிவிப்பு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. கூடுதலாக, பொங்கலுக்கு ரூ.2,500, இலவச வேட்டி-சேலை, தீபாவளிக்கு சேலை, ஏழைகளுக்கான கான்கிரீட் வீடுகள், கோரைப்பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களையும் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்தப் பயணம் அதிமுக ஆதரவாளர்களைத் தாண்டி பொதுமக்களிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்து. குறிப்பாக, “அதிமுக இன்னும் வலுவாக இருக்கிறது” என்பதையும், ஒவ்வொரு தொகுதியிலும் திரண்ட மக்கள் கூட்டத்தின் மூலம் ஆளும் திமுகவுக்கும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆற்காட்டில் 100-வது தொகுதி பயணத்தை நிறைவு செய்தபோது, “இது துவக்கம் மட்டுமே” என்று கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.