கேரளாவில் அர்ஜெண்டினா எதிரணி யார்? – ஆஸ்திரேலியா, சவுதி, கத்தார் அணிகள் பரிசீலனை

வரும் நவம்பரில் கேரள மாநிலத்தில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி நட்பு ஆட்டத்தில் பங்கேற்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அர்ஜெண்டினா அணிக்கு எதிராக விளையாடப் போகும் அணி யார் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுவரை அது முடிவாக தீர்மானிக்கப்படவில்லை என்று போட்டி ஏற்பாட்டாளரான ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் கம்பெனி தெரிவித்துள்ளது.

“சில நாட்களுக்கு முன்பு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி இந்தியாவில் ஆடும் தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றோம். ஆனால் முதலில் அந்த அணியின் நிர்வாகமே இதை அறிவிக்க வேண்டும் என நினைத்து அமைதியாக இருந்தோம். இப்போது அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் எதிரணி அணி தொடர்பாக ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, கத்தார், பிரேசில் உள்ளிட்ட அணிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். மேலும், அர்ஜெண்டினா வீரர்கள் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மலப்புரம் அல்லது கோழிக்கோட்டில் நடக்க வாய்ப்பு உள்ளது.

இந்தப் போட்டி நடத்த சுமார் 400 கோடி ரூபாய் செலவாகும். ஆனால் இரண்டு தேசிய அணிகள் பங்கேற்க இருப்பதால், நிதி சிக்கல் ஏற்படாது. ஏற்கனவே பல நிறுவனங்கள் ஸ்பான்சராக முன்வந்துள்ளன.

அர்ஜெண்டினா அணியுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி, அவர்கள் அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியாவில் விளையாட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஆரம்பத்தில் அந்த அணி அடுத்த ஆண்டில் மட்டுமே வருவதாகச் சொன்னது. இதனால் சில குழப்பங்கள் ஏற்பட்டன. தற்போது அனைத்தும் தெளிவடைந்து, நவம்பரில் அர்ஜெண்டினா இந்தியாவில் களமிறங்குகிறது” என அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆண்டோ அகஸ்டின் தெரிவித்துள்ளார்.

நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா கேரளாவில் விளையாட உள்ள செய்தி, இந்திய முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments Box