“ஊழலை எதிர்க்கட்சி ஆதரிக்கிறதா?” – பதவி பறிப்பு மசோதா குறித்து மத்திய சட்ட அமைச்சர் கேள்வி

பதவி பறிப்பு தொடர்பான 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதா முற்போக்கானது எனவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஊழலை ஆதரிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம், இந்தூரில் நடைபெற்ற “தாயின் பெயரில் மரம் நடும்” விழாவில் கலந்து கொண்ட அவர், பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

  • நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தில், பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் அவர்களின் பதவியை நீக்குவதற்கான மூன்று மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
  • பின்னர், அவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்படுவதற்கான தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இது மிகச் சிறந்த, முன்னேற்றமான சட்டமாகும். எதிர்க்கட்சிகள் இதை ஆதரிக்க வேண்டும். ஆனால் அவர்கள் எதிர்க்கிறார்கள். அப்படியானால், அவர்கள் ஊழலுக்கு ஆதரவாக உள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.
  • “மசோதா தவறாகப் பயன்படுத்தப்படலாம்” என எதிர்க்கட்சிகள் கூறினாலும், அவர்கள் முழுமையாக மசோதாவை படிக்கவில்லை என்று தோன்றுகிறது.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

  • ஒரு அமைச்சர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டில் 30 நாட்கள் தொடர்ந்து காவலில் இருந்தாலோ, அல்லது 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றத்தில் சிக்கியிருந்தாலோ, 31-வது நாளில் முதல்வரின் பரிந்துரையின் பேரில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
  • பரிந்துரை செய்யப்படாத போதும், தானாகவே அவர் பதவியை இழப்பார்.
  • பிரதமர் அல்லது முதல்வர் 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தாலோ, 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டாலோ, 31-வது நாளிலிருந்து அவர்களின் பதவி நீக்கம் அமலாகும்.
  • கைது செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் விடுவிக்கப்பட்ட பின், அவர்களை மீண்டும் நியமிக்க தடையில்லை எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா கொலை, பெரிய அளவிலான ஊழல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் நேரடியாகப் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box