ஆப்கனிஸ்தானில் பேருந்து விபத்து : 19 சிறுவர்கள் உட்பட 79 உயிரிழப்பு

ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் நடந்த பேருந்து விபத்தில், 19 குழந்தைகள் உட்பட மொத்தம் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானில் இருந்து ஆப்கனிஸ்தானுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணம் செய்த பேருந்து, அந்நாட்டின் வடமேற்குப் பகுதியான ஹிராட் மாகாணத்தில் நேற்றிரவு (உள்ளூர் நேரம் இரவு 8.30) லாரி மற்றும் இருசக்கர வாகனத்துடன் மோதியது. மோதி சில நொடிகளில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 குழந்தைகளும் உட்பட 79 பேர் பலியானதாக ஆப்கன் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் மடீன் கானி தெரிவித்துள்ளார்.

ஆப்கனிஸ்தானில் சாலைகளின் தரமின்மை, போக்குவரத்து வசதிகள் குறைபாடு மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாக அடிக்கடி பெரிய விபத்துகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் மட்டும், ஈரானில் இருந்து சுமார் 18 லட்சம் ஆப்கனியர்கள் வலுக்கட்டாயமாக தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதேபோல் பாகிஸ்தானில் இருந்து 1,84,459 பேரும், துருக்கியில் இருந்து சுமார் 5,000 பேரும் ஆப்கனிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் சிறையில் இருந்த சுமார் 10,000 ஆப்கனியர்களும் தாய்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆப்கன் அரசு, அகதிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையை கடந்த ஜூலை மாதத்தில் கடுமையாக கண்டித்தது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள், ஆப்கனியர்கள் தங்களது நாட்டில் சட்டவிரோதமாக தங்கி வருவதாகக் கூறி திருப்பி அனுப்புவதாக தெரிவித்துள்ளன.

ஆப்கன் அகதிகள் அமைச்சகத்தின் தகவலின்படி, தற்போது சுமார் 60 லட்சம் ஆப்கனியர்கள் உலக நாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.

Facebook Comments Box