உக்ரைன் போரைக் களைவதற்காகவே இந்தியாவுக்கு வரி விதித்ததாக அமெரிக்கா விளக்கம்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலை நிறுத்த வைப்பதற்காகவே, இந்தியா மீது கூடுதல் வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்ததாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்காக அதிபர் ட்ரம்ப் கடுமையான அழுத்தத்தை உருவாக்கியுள்ளார். அதன்பகுதியாக, இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் கூடுதல் வரிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற உறுதியுடன் ட்ரம்ப் செயல்படுகிறார். அவர் விரைவில் அமைதியை நிலைநிறுத்த விரும்புகிறார்.

நேட்டோ பொதுச் செயலாளர் உட்பட ஐரோப்பிய தலைவர்கள் இதை ஒரு நல்ல தொடக்கம் என பாராட்டியுள்ளனர். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ட்ரம்ப் இடையே உரையாடல் நடப்பது நல்ல விஷயம் என்றும் அதிபர் விரும்புகிறார். ரஷ்யா – உக்ரைன் இரு தரப்புடனும் இணைந்து செயல்பட்டு, உறவை பலப்படுத்துவதே அமெரிக்க அரசாங்கத்தின் நோக்கம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.

ட்ரம்ப், அமெரிக்க மண்ணில் புதினை சந்தித்து ஆலோசனை நடத்திய 48 மணி நேரத்துக்குள், அனைத்து ஐரோப்பிய தலைவர்களையும் வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அதனால், ட்ரம்ப் ஏற்பாடு செய்த இந்த சந்திப்பு வாயிலாக ரஷ்யாவின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததற்கு, ஐரோப்பிய தலைவர்கள் நன்றியுணர்வுடன் உள்ளனர். முந்தைய நிர்வாகம் செய்யத் தவறிய செயலை ட்ரம்ப் செய்துள்ளார்” என கரோலின் லீவிட் விளக்கம் அளித்தார்.

Facebook Comments Box