“புதிய தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளேன்” – மூளையில் சிப் பொருத்தப்பட்ட முதல் நபரின் அனுபவம்

எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய சிப்பை மூளையில் பொருத்திக் கொண்ட முதல் நபரான நோலண்ட் அர்பாக், விரைவில் தொழில் தொடங்கும் எண்ணத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சுமார் 18 மாதங்களுக்கு முன்பு அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன் பின், நியூராலிங்க் சிப் மூலம் தினசரி வாழ்க்கையில் பல அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். உடல் இயக்கமின்றி இருந்தபோதும், தற்போது கணினி, டிவி, ஏர் பியூரிபையர் போன்ற சாதனங்களை கட்டுப்படுத்த முடிகிறது என கூறியுள்ளார். தற்போது அவர் அரிசோனாவில் உள்ள கல்லூரியில் கல்வி கற்கிறார். 2016-ல் நீச்சல் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் முதுகெலும்பு சேதமடைந்து, தோள்பட்டை கீழே உணர்வும் இயக்கமும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

“அறுவை சிகிச்சைக்கு முன்பு இரவில் விழித்திருப்பேன், பகலில் தூங்குவேன். யாருக்கும் தொந்தரவு செய்யாமல் அமைதியாகவே இருந்தேன். உடல் அசைவின்றி இருந்த என்னுள் நம்பிக்கையே மட்டும் உயிர்த்துடிப்பாக இருந்தது.

சிகிச்சைக்குப் பிறகு பல செயல்களை சுயமாக செய்ய முடிகிறது. வாழ்க்கை நிறைவடைந்தது போல உணர்கிறேன். நேரத்தை பயனுள்ளவாறு செலவிடுகிறேன். இந்த முயற்சியை எதிர்கொண்ட முதல் நபராக இருப்பது பெருமையாக உள்ளது. இது வெற்றி அடைந்தால் மகிழ்ச்சி; தோல்வி அடைந்திருந்தாலும், அதுவே அடுத்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கும்.

சிப் பொருத்தப்பட்ட உடனே அதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. அதை நியூராலிங்க் குழு சரிசெய்தது. இப்போது சுமார் 10 மணி நேரம் வரை கணினியைப் பயன்படுத்த முடிகிறது. மரியோ கார்ட் விளையாட்டையும் விளையாடுகிறேன். தொழில் தொடங்கும் எண்ணமும் உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக நான் சைபார்க் (எந்திர உதவியால் இயங்கும் மனிதர்). இருந்தாலும் சாதாரண மனிதரைப் போலவே உணர்கிறேன். இதனுடன் வாழ்வது சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது” என அர்பாக் தெரிவித்தார்.

நியூராலிங்க் நிறுவனம் மனித மூளைக்கும் கணினிக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தும் வகையில் சிப்பை உருவாக்கி வருகிறது. கடந்த காலத்தில் குரங்குகளின் மீது சோதனை செய்திருந்தது. தற்போது மனிதர்களுக்கு சோதனை நடத்தி வருகிறது. இந்த ஆய்வுப் பணிகள் இன்னும் 5 ஆண்டுகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box