ஓப்பனராக 42 பந்துகளில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன்: கேரளா கிரிக்கெட் லீக்!

கேரள கிரிக்கெட் லீக் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டு 42 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன்.

இந்த தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் கொல்லம் அணிக்கு எதிராக 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ள கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணி விரட்டியது. அவரது அபார சதம் அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது கொச்சி அணி.

இந்த ஆட்டத்தில் 51 பந்துகளில் 121 ரன்களை விளாசி இருந்தார் சஞ்சு சாம்சன். அவரது இன்னிங்ஸில் 14 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். இதற்கு முந்தைய இன்னிங்ஸில் 6-வது பேட்ஸ்மேனாக விளையாடி, 13 பந்துகளில் 22 ரன்களை அவர் எடுத்திருந்தார். இது ஆசிய கோப்பை தொடருக்கான பயிற்சியாக அவருக்கு அமைந்துள்ளது.

எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனெனில், இம்முறை டி20 அணியில் ஷுப்மன் கில் இடம்பெற்றுள்ளார். அதனால் இருவரில் யார் தொடக்க ஆட்டக்காரர் என்ற விவாதம் இப்போது எழுந்துள்ளது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக இடது கை பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா ஆடுவது உறுதி.

கடந்த 2024 அக்டோபர் மாதம் முதல் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் விளையாடி வருகிறார். அப்போது முதல் 12 இன்னிங்ஸில் ஆடியுள்ள அவர் 3 சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box