பாலியல் புகாரில் சிக்கிய கேரள எம்எல்ஏ: காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்
பாலியல் துன்புறுத்தல் புகாரில் சிக்கிய கேரளா மாநில பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மாம்கூட்டத்தில் (35), காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ராகுல் மாம்கூட்டத்தில் பாலக்காடு சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றார்.
இதற்கிடையில், மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ், “காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் மாம்கூட்டத்தில் சமூக வலைதளங்கள் மூலம் பலமுறை பாலியல் தொடர்பான தகவல்களை அனுப்பியுள்ளார். ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்” என குற்றம்சாட்டினார்.
பின்னர் எழுத்தாளர் ஹனி பாஸ்கரன், திருநங்கை அவந்திகா, மேலும் காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் உட்பட பலரும் ராகுல் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதையடுத்து, கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியில் இருந்து அவர் சமீபத்தில் விலகினார்.
இந்நிலையில், அவர் நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். இதுகுறித்து கேரள காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் கூறுகையில், “ராகுல் மாம்கூட்டத்தில் மீது காவல்துறையில் அதிகாரப்பூர்வ புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. இருந்தாலும் குற்றச்சாட்டுகள் மிகுந்த தீவிரம் வாய்ந்தவை என்பதால், ஒருமித்த முடிவின் அடிப்படையில் அவர் கட்சி உறுப்பினர் மற்றும் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்” என்றார்.