உரங்கள், அரிய தனிமங்களை வழங்கும் சீனா – இந்திய வேளாண்மை, ஆட்டோமொபைல் துறைக்கு பெரிய பலன்

2020 ஜூன் மாதத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய–சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான மோதல் நடந்தது. இதன் பின்னர் இருநாடுகளின் உறவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நிலப்பரப்பு வழி வர்த்தகம் நிறுத்தப்பட்டதோடு, இருதரப்பும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. அதன் காரணமாக, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு உரங்கள், அரிய தனிமங்கள், சுரங்க இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படாமல் போனது.

ஆனால் சமீபத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய போது, உறவுகள் சீராகும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன. அதன் படி, சீனா இந்தியாவுக்கான ஏற்றுமதி தடையை முழுமையாக நீக்கியுள்ளது. குறிப்பாக உரங்கள், அரிய தனிமங்கள், சுரங்க இயந்திரங்களை தாராளமாக வழங்கும் முடிவை எடுத்துள்ளது. மேலும், தரைவழி சரக்கு போக்குவரத்தும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வாகன உற்பத்தி, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றுக்கு அரிய தனிமங்கள் மிகவும் அவசியமானவை. உலகளவில் தேவைப்படும் இத்தனிமங்களின் 70% சீனாவே வழங்குகிறது. எனவே சீனாவின் இந்த புதிய தீர்மானம் இந்திய வேளாண்மை மற்றும் ஆட்டோமொபைல் துறைக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பொருளாதார நிபுணர்கள் கூறுகையில்:

“சீனா முதன்முறையாக வளைந்து கொடுத்து இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு வருடத்திற்கு சுமார் 7,500 டன் அரிய தனிமங்கள் தேவைப்படும் நிலையில், அவற்றை முழுமையாக வழங்க சீனா தயாராகியுள்ளது. இதனால் கார் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் உயர்ந்துள்ளன. சீனாவும், விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கவிருக்கும் இந்தியாவும் இணைவது, உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தனர்.

இந்தியா–ரஷ்யா புதிய பொருளாதார வழித்தடம்

இதே நேரத்தில், இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து ‘ஐஎன்எஸ்டிசி’ எனும் புதிய பொருளாதார பாதையை செயல்படுத்த முடிவு செய்துள்ளன. இதன் படி, இந்தியாவில் இருந்து பொருட்கள் கப்பல் மூலம் ஈரான் துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து சாலை, ரயில் வழியாக காஸ்பியன் கடல் பகுதிக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் கப்பல் மூலம் ரஷ்ய துறைமுகங்களுக்கு சென்றடையும்.

இந்த வழித்தடம் மூலம் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்கள், இயந்திரங்கள் இந்தியாவுக்கு வரும். அதே சமயம், இந்தியாவில் இருந்து ஜவுளி, மருந்து, வேளாண் பொருட்கள் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மேலும், ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்–சென்னை இடையே புதிய கடல் வழித்தடமும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயண தூரம் தற்போது இருக்கும் 8,675 கி.மீ-யில் இருந்து 5,647 கி.மீ. ஆக குறையும்.

இந்த முயற்சிகள் அனைத்தும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Facebook Comments Box