எஸ்எஸ்சி தேர்வர்கள் மீது தாக்குதல்: ராகுல் காந்தியின் கண்டனம்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டதாவது:
எஸ்எஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, ராம்லீலா மைதானத்தில் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி வெட்கக்கேடான ஒன்றாக மட்டுமின்றி, அது ஒரு பலவீனமான அரசாங்கத்தின் சின்னமாகும்.
வாக்குகளைப் பெற அரசாங்கம் முதலில் தேர்தலில் மோசடி செய்தது; அடுத்து தேர்வுகளில் முறைகேடுகளை அனுமதித்தது; அதன் பிறகு வேலை வாய்ப்புகளை வழங்க தவறியது; இப்போது மக்களின் உரிமைகளையும் குரல்களையும் அடக்க முயல்கிறது.
இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள், தலித் மக்கள், சிறுபான்மை சமூகங்கள் ஆகியோரின் கோரிக்கைகளுக்கு இந்த அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் வாக்குகளை சார்ந்தவர்கள் அல்ல. மக்கள் திடமாகவும் அச்சமின்றியும் இருந்து போராட வேண்டும். என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும்,
‘‘இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை பறிப்பது மோடி அரசின் பழக்கமாகியுள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் எஸ்எஸ்சி தேர்வில் நடந்த மோசடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மோடி அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட காவல்துறை நடத்திய கொடூரமான தடியடி கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று’’ எனக் கூறியுள்ளார்.