பிரதமர் மோடி – பிஜி பிரதமர் ரபுகா சந்திப்பு: 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது: “இந்தியா மற்றும் பிஜியின் கடல்கள் வேறுபட்டிருக்கலாம். ஆனால் எங்களின் விருப்பங்கள் ஒரு படகில் பயணிக்கின்றன. பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான பரந்த செயல் திட்டத்தை உருவாக்க இந்தியாவும் பிஜியும் உறுதிபூண்டுள்ளன.

இரு நாடுகளும் பாதுகாப்பான மற்றும் வளமான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிக்கின்றன. பிரதமர் ரபுகா இந்தியாவுக்கு முதன்முறையாக வருகை தந்துள்ளார். அவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக இருதரப்பினரும் ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். பாதுகாப்பு துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதற்கான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.”

பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த தேவையான பயிற்சி மற்றும் உபகரணங்களை இந்தியா வழங்கும். மேலும், பருவநிலை மாற்றம் பிஜி நாட்டுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பேரிடரை சமாளிக்க தேவையான அனைத்து உதவிகளும் இந்தியா சார்பில் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடல்சார் பாதுகாப்புத் துறையில் பிஜி இந்தியாவிற்கு ஒரு முக்கிய நாடு. பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது பலத்தை அதிகரிக்க இடைவிடாமல் முயற்சிக்கும் பின்னணியில், பிஜியுடன் இந்தியா தனது பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்த அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

Facebook Comments Box