‘INS உதயகிரி’ – ‘INS ஹிம்கிரி’: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணம்
இந்தியாவில் முழுமையாக உருவாக்கப்பட்ட இரண்டு ஸ்டெல்த் போர்க்கப்பல்கள் INS உதயகிரி மற்றும் INS ஹிம்கிரி அதிகாரப்பூர்வமாக கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில், இரண்டு வேறு கப்பல் கட்டும் தளங்களில் தயாரிக்கப்பட்ட பெரிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்படுவது இந்திய வரலாற்றில் முதன்முறை.
ப்ராஜெக்ட் 17A எனப்படும் இந்த மேம்பட்ட கப்பல் கட்டும் திட்டம் 2019ல் தொடங்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு தேவையான நவீன ஸ்டெல்த் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு கப்பல்களை உருவாக்குவதே இதன் நோக்கம். மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் (MDL) மற்றும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) ஆகிய நிறுவனங்கள் இதன் பணிகளை மேற்கொண்டன.
இந்த திட்டத்தின் முதல் கப்பலான INS நீலகிரி, ஷிவாலிக் வகையைச் சேர்ந்த கப்பல்களை விட அதிக நவீன வசதிகளுடன் பிரதமர் மோடியால் ஜனவரி மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதேபோல் Project-75 திட்டத்தின் இறுதி கப்பலான INS வாக்ஷீர் சமீபத்தில் கடற்படையில் இணைக்கப்பட்டது.
100% உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட INS உதயகிரி மற்றும் INS ஹிம்கிரி, முந்தைய ஷிவாலிக் வகை கப்பல்களை விட 5% அதிக பருமனானவை; தலா 6,700 டன் எடையுடையவை. INS உதயகிரி, கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு மையம் உருவாக்கிய 100வது கப்பல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கப்பல்களின் தயாரிப்பில் சுமார் 200 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்காற்றியுள்ளன. இதன் மூலம் 4,000க்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும், 10,000க்கும் மேற்பட்டோருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது.
CODOG எனப்படும் எரிவாயு விசையாழி மற்றும் டீசல் எஞ்சின் கலவையைப் பயன்படுத்தி இயங்கும் இக்கப்பல்கள், அதிக வேகம், மேம்பட்ட செயல்திறன் மற்றும் எளிய இயக்கம் ஆகியவற்றை வழங்குகின்றன. இவை சூப்பர்சோனிக் தரை-தரை ஏவுகணைகள், நடுத்தர தூர வான் எதிர்ப்பு ஏவுகணைகள், 30மிமீ மற்றும் 12.7மிமீ துப்பாக்கிகள், 76மிமீ பிரதான துப்பாக்கி, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஆயுதங்கள் போன்ற பல்வேறு ஆயுத வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடல் விரிவாக்கம், அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றின் அழுத்தம் ஆகியவை அதிகரித்து வரும் நிலையில், INS உதயகிரி மற்றும் INS ஹிம்கிரி இந்திய கடற்படைக்கு கூடுதல் வலிமை தருகின்றன.
அடுத்த ஆண்டு INS தாரகிரி, INS மகேந்திரகிரி, INS துனகிரி, INS விந்தியகிரி ஆகிய கப்பல்கள் கடற்படையில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் வர்த்தகப் பாதைகள், மலாக்கா நீரிணை முதல் ஆப்பிரிக்கா வரை, இந்திய கடற்படையின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் இக்கப்பல்கள் பெரும் பங்களிப்பு செய்யும் என மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த போர்க்கப்பல்கள், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் சிறப்பான வெற்றியை வெளிப்படுத்துகின்றன.