கேரளாவின் பிரபலமான குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில், மாற்று மதத்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் புனிதக் குளத்தில் இறங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும், சமூக வலைதளங்களில் பிரபலமாகவும் இருக்கும் ஜாஸ்மின் ஜாபர் என்ற யூடியூபர், சில நாட்களுக்கு முன் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்பதால், அவரின் செயல் பக்தர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. கோயிலின் புனிதம் குலைந்துவிட்டதாக பலரும் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, கோயில் நிர்வாகம் பரிகார பூஜைகளை நடத்தத் தொடங்கியது. நேற்று காலை முதல் ஆரம்பித்த இந்த பூஜை, ஆறு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜாஸ்மின் ஜாபர் தனது சமூக வலைதளத்திலிருந்து அந்த வீடியோவை நீக்கி, மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Facebook Comments Box