புஜாராவின் பங்களிப்பு கோலி, ரோஹித் போல் மிகப்பெரியது: அஸ்வின் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணிக்கு கோலி மற்றும் ரோஹித் அளித்த பங்களிப்புக்கு இணையாக புஜாராவும் முக்கிய பங்காற்றியுள்ளார். ஆனால் அவர் பெரிதும் வெளிச்சத்திற்கு வரவில்லை என முன்னாள் ஆல்ரவுண்டர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் புஜாரா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய அணிக்காக அவர் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 7,195 ரன்கள் சேர்த்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது நிலையான ஆட்டம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வந்தது. குறிப்பாக தடுப்பாட்ட நிபுணராக அறியப்பட்டவர்.

“இந்திய அணிக்கு புஜாரா செய்த பங்களிப்பு, கோலி மற்றும் ரோஹித்தின் பங்களிப்புக்கு இணையாகும். சிலரின் ஆட்டம் பற்றி அடிக்கடி பேசப்படும். ஆனால் எல்லா வீரர்களும் அப்படிப் புகழப்படுவதில்லை. அதனால் அவர்கள் அளித்த பங்களிப்பு குறைவானது என்று சொல்ல முடியாது.

மூன்றாவது பேட்ஸ்மேனாக புஜாரா களமிறங்கியதால், விராட் கோலி அதிக ரன்கள் எடுக்க வசதி பெற்றார். இது நம்பினாலும், நம்பாமல் இருந்தாலும் உண்மை. கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் புஜாராவின் ஆட்டத்தை நன்றாக அறிவார்கள். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ பார்த்தவர்கள் அதில் வரும் ‘வொய்ட் வாக்கர்’ பாத்திரத்தை தெரிந்திருப்பார்கள். அதுபோல புஜாராவும், மெதுவாக நடந்தாலும் ஒருபோதும் களத்தை விட்டுப் போகாதவர்” என அஸ்வின் தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box