நாளை முதல் இந்தியப் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: வரைவு அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை, அதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், கடந்த ஆகஸ்ட் 6, 2025 அன்று ட்ரம்ப் வெளியிட்ட “ரஷ்யாவால் அமெரிக்காவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளித்தல்” என்ற தலைப்பிலான நிர்வாக ஆணை (Executive Order 14329) அடிப்படையில் இந்த கூடுதல் வரிகள் விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரி விகிதம் அமல்படுத்தப்படுவதாக விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27 நள்ளிரவு 12.01 மணி முதல் அமலாகும் இந்த உத்தரவின் படி, அமெரிக்காவின் இணக்கமான கட்டண அட்டவணை (HTSUS) மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், கடந்த ஜூலை 30, 2025 அன்று ட்ரம்ப் இந்தியாவுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பதாக அறிவித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியா எங்கள் கூட்டாளியாக இருந்தாலும், பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் மிகக் குறைந்த அளவிலான வியாபாரமே செய்து வந்தோம். காரணம், இந்தியாவின் வரிகள் அதிகமாக இருப்பதுடன், கடுமையான வர்த்தக தடைகளையும் கொண்டுள்ளது. மேலும், அவர்கள் பெரும்பாலான ராணுவ உபகரணங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகின்றனர். அதோடு, சீனாவுடன் இணைந்து ரஷ்யாவின் முக்கியமான கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவு தேவைப்படுகிறது. எனவே ஆகஸ்ட் 1 முதல், இந்தியா கூடுதல் 25% வரியை செலுத்த வேண்டும்” என ட்ரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையில், நாளை அமலுக்கு வரும் 50% வரி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அகமதாபாத்தில் பேசியபோது, “எந்த அழுத்தமும் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் திறனை நாம் தொடர்ந்து வளர்த்துக் கொள்வோம். இன்று ‘ஆத்மநிர்பர் பாரத்’ முயற்சியின் மூலம், குஜராத்திலிருந்து பெரிய அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறோம். இதற்குப் பின்னால் இருபது ஆண்டுகால கடின உழைப்பு இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.