பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் பெரும் திரளில் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், விநாயக சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், 23-ஆம் தேதி கஜமுகசூரன் வதம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர் பெரிய தேரில், சண்டிகேசுவரர் சிறிய தேரில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாலை 5.40 மணிக்கு தேரோட்டம் ஆரம்பமாக, பக்தர்கள் திரளாக வந்து வடம் பிடித்து தேர் இழுத்தனர். சண்டிகேசுவரர் தேரை பெண்கள் மட்டுமே இழுத்தது சிறப்பாகக் கருதப்பட்டது.

மேலும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரம் நேற்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது. இதில் மூலவர் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று (சதுர்த்தி தினம்) அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி நடைபெறும். பிற்பகல் 2 மணிக்கு மூலவருக்கு முக்குறுணி மோதகங்கள் படையலிடப்படும். இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாட்டுடன் விழா நிறைவடைகிறது.

Facebook Comments Box